இன்றைய அவசர உலகில் பலரும் காய்ச்சல், தலைவலி மற்றும் சின்னச் சின்ன உடல் சிக்கல்களுக்குக் உடனடியாக ஒரு மாத்திரையை விழுங்க வேண்டும். உடனே உடல் உபாதை தீர வேண்டும் என்று கருதுகின்றனர்.
அதிலும், உரிய மருத்துவரை சந்தித்து அவர் எழுதிக் கொடுக்கும் மாத்திரையைச் சாப்பிடக் கூட அவர்களுக்கு நேரமில்லையாம். அதனால் பலரும் நேராக மருந்து கடைகளுக்குச் சென்று தங்களது பிரச்சினைகளைக் கூறி ஏதாவது மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர்.
இது மாத்திரையை மட்டுமல்ல... ஆபத்தையும் விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமல் செய்கின்றனர். ஆனால் அவர்கள் கேட்கும் கேள்வி, இப்படி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டாக்டரிடம் போக முடியுமா? என்பதுதான்.
இது நமது உடல் சம்பந்தப்பட்டது என்பதை முதலில் உணர வேண்டும். ஒவ்வொரு வலியும் ஒரு நோயின் அறிகுறி என்பதை உணர வேண்டும். ஒருவருக்கு தலை வலிக்கிறது என்றால் அதற்கு எத்தனை எத்தனை காரணங்கள் இருக்கலாம் என்று தெரியுமா? பார்வைக் கோளாறு, சைனஸ் பிரச்சினை, தலையில் நீர் அழுத்த நோய் என பல்வேறு விஷயங்களால் தலைவலி ஏற்படலாம். இதையெல்லாம் பார்க்காமல், வெறும் தலைவலியைப் போக்க வலி நிவாரணி சாப்பிடுவதால் ஒரு வியாதியை நமக்கு உணர்த்துவதற்காக வந்த தலைவலி போய்விடலாம். ஆனால் அந்த நோய்... நம்மை என்ன செய்யும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
மேலும் சிலர் எடுத்ததற்கெல்லாம் மாத்திரை போடுகிறார்கள். இதனால், உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் பயனற்றுப் போகின்றன. அவற்றிற்கு வேலை கொடுக்காமலேயே விட்டுவிடுவதால், அவற்றிற்கும் இயங்கும் சக்தியேப் போய், அவர் ஒரு மாத்திரை மனிதனாகிப் போய்விடுவார்.
பொதுவாக பலரும், ஒரு மருத்துவரிடம் சென்று நோயைக் கூறியதும், அவர் எழுதிக் கொடுக்கும் மருந்தைப் போட்டதும் நோய் சரியாகிவிட்டால் உடனே அவர் கைராசி மருத்துவர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் அந்த பெயர் எடுப்பதற்காக, எவ்வளவு அதிக வீரியமிக்க மருந்துகளை நமக்கு பரிந்துரைக்கிறார் என்று அறிந்திருப்போமா?
சில மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரைகளில் அதிகப்படியான செயலாற்றுத் திறன் காரணமாக, நோய் பாதித்தவர், நோயின் தாக்குதலை விட, மருந்தின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். தலை சுற்றல், கை கால் நடுக்கம், நாக்கு, உதடு வறண்டு போவது, உடலில் நீர்த்தன்மை குறைவது, நினைவை இழப்பது வரை ஒரு மாத்திரையின் பக்க விளைவுகள் ஏராளம் ஏராளம்.
இப்படி நாம் நம்முடைய இஷ்டத்திற்கு வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் அப்போதைய நிவாரணி என்றாலும், பின்னாளில் நம்முடைய உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
குறிப்பிட்ட வகை மாத்திரைகள் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு கொடுக்க கூடியது என்றாலும், நோயின் தன்மை, அதற்கான அடிப்படை காரணம், நோயாளியின் உடல் நிலை ஆகியவற்றை பொறுத்தே மாத்திரை, மருந்துகள் கொடுக்க வேண்டும். அப்படியில்லாமல் படு வீரியமான மாத்திரைகள் கண்டிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் அவர்கள்.
உதாரணமாக, ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது, அந்த குழந்தைக்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மாத்திரைகளை கொடுத்தால் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதேபோல் தான் மற்ற பிரச்சினைகளுக்கும் மாத்திரைகள் எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் கருத்து.
நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான உடல் வாகு இருக்கும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், நம்முடைய விருப்பத்திற்கு தகுந்தாற்போல் மாத்திரையை சாப்பிடும்போது, அந்த மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அல்சர், வயிற்று பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு போன்றவை உண்டாகும். பொதுவாக மாத்திரை சாப்பிடுபவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். இதனால் கிட்னி பிரச்சினை மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரை இன்றி மாத்திரைகளை சாப்பிடும்போது பிரச்சினை பெரிதாகும்.
இந்தியாவில் உருவாக்கப்படும் மாத்திரைகளில் பெரும்பாலும் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்புகளுக்கும் மற்றும் இன்னும் சில தேவைகளுக்கும் சேர்த்தே ஒரே மாத்திரையாக தயாரிக்கின்றனர். இதனால் தான் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
நம்மில் பலருக்கு காலையில் டிபன் சாப்பிடும் பழக்கம் குறைவு. மேலும் வெறும் வயிற்றில் காபி, டீ மற்றும் பால் சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை சாப்பிடும் பழக்கமும் உள்ளது. இதனால் உடலில் பல வித நோய்களை நீங்களே வரவழைக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உங்களின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும். வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
பெரும்பாலும் நாம் மருத்துவரிடமே செல்லாமல் மருந்துக் கடையில் மாத்திரை வாங்குவது தலைவலிக்கும், காய்ச்சலுக்கும்தான். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்... தலைவலியில் 45 வகைகளும், காய்ச்சலில் 40 வகைகளும் இருக்கின்றன. இதில் எந்த வகைக்கு நீங்கள் மாத்திரை வாங்குகிறீர்கள்? வியாதியை குணப்படுத்துவதற்குத்தான் மருந்து மாத்திரைகளேத் தவிர, உடலைக் கெடுத்துக் கொள்ள அல்ல... எதற்கெடுத்தாலும் மாத்திரையை சாப்பிடுவதால், மருந்தே இல்லாத ஒரு நோயை நீங்கள் வரவழைத்துக் கொள்ள நேரிடும்... எச்சரிக்கை.
NANDRI : TAMIL WEBDUNIA
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment